Site icon Colourmedia News

உலகக் கோப்பையில் திடீர் திருப்பம் … தொடக்க விழா ரத்து?

ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் நாளை (அக். 5) அகமதாபாத்தில் தொடங்குகிறது. பயிற்சி ஆட்டம் இன்றுடன் நிறைவடைய நிலையில், உலகக் கோப்பைக்கான தொடக்க விழா குறித்த எதிர்பார்ப்பும் அதிகம் இருந்தது. முதல் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், கடந்த தொடரில் இரண்டாம் இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் முதல் போட்டியில் விளையாட உள்ளன. மேலும் முதல் போட்டிக்கு முன் கோலாகலமான தொடக்க விழா நடைபெறும் என கூறப்பட்டது. குறிப்பாக, அக். 5ஆம் தேதி மதியம் போட்டி தொடங்குவதால் அக். 4ஆம் தேதியே தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

வாணவேடிக்கை, லேசர் நிகழ்ச்சிகள், பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்களின் ஆடல், பாடல் நிகழ்வுகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, அர்ஜித் சிங், சங்கர் மகாதேவன், ஷ்ரேயா கோஷல், ஆஷா போஷ்லே உள்ளிட்ட பாடகர்களும், ரன்வீர் சிங், தமன்னா உள்ளிட்ட நடிகர்கள் நடனமாடுவார்கள் எனவும் கூறப்பட்டது.

ஆனால், தற்போது இந்த தொடக்க விழா நிகழ்வுகள் நடைபெறாது என தகவல்கள் வெளியாகின்றன. அதற்கு பதில் இறுதிப்போட்டிக்கு முன்னரோ அல்லது அக். 14ஆம் தேதி அதே அகமதாபாத் நகரில் நடக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு முன்னரோ அதுபோன்று கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

Exit mobile version