உலகக் கோப்பைப் போட்டி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரையில் இந்தியாவில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தலா இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.
அதன்படி இன்று கெளஹாத்தியில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இருப்பினும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடங்க தாமதமாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்டத்தைத் தொடங்க முடியாத அளவுக்கு மழை பெய்ததால், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் – தென்னாப்பிரிக்கா இடையேயான பயிற்சி ஆட்டம் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டுள்ளது.
அதேபோல, ஆஸ்திரேலியா – நெதர்லாந்து பயிற்சி ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மழை காரணமாக ஆட்டம் 23 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மித் 55 ரன்கள் எடுத்தார். இந்த இலக்கைத் துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே தடுமாறியது. மிட்செல் ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நெதர்லாந்து 14.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. ஆட்டத்தைத் தொடர முடியாத அளவுக்கு மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா தனது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் அக்டோபர் 3-ல் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்து தனது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. கெளஹாத்தியில் அக்டோபர் 2-ல் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.