Site icon Colourmedia News

என்ஜியோகிராம் கருவி இல்லாததால் இதய நோயாளிகள் உயிரிழந்து வரும் அபாயம்! – ஊவா, சப்ரகமுவ மாகாணங்களின் நிலவரம் 

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணத்தின் எந்த அரச வைத்தியசாலைகளிலும் இதய நோய்கள் தொடர்பாக பரிசோதனை செய்யும் என்ஜியோகிராம் கருவிகள் இல்லாததால், இதயம் தொடர்பான பாதிப்பை எதிர்நோக்கியுள்ள பல நோயாளர்கள் உயிரிழந்து வருவதாக பதுளை பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியும் இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளருமான மருத்துவர் பாலித ராஜபக்ஷ வேதனையோடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கூறுகையில்,

இதயத்துக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை இருக்கிறதா என்பதை அறிந்து, இரத்த நாளங்களை எக்ஸ்ரே படங்களின் மூலம் கண்டறிவதற்கு என்ஜியோகிராம் (Angiogram) கருவியை கொண்டு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்படுகின்றது.
ஆனால், பெருந்தோட்ட மற்றும் கிராமபுற மக்கள் பரந்து வாழும் ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் இந்த கருவிகள் இல்லை. இலங்கையில் 42 அரச வைத்தியசாலைகளில் மாத்திரமே இக்கருவிகள் இருக்கின்றன. இக்கருவியினூடாக செய்யப்படும் பரிசோதனைக்காக நோயாளர்கள் கண்டி அல்லது கொழும்புக்குச் செல்கின்றனர். அவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்வாங்கப்பட்டு திகதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அந்த காலம் வருவதற்கு முன்பாகவே அந்த நோயாளர்களில் பலர் உயிரிழந்துவிடுகின்றனர்.

கடந்த வாரம் பதுளை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்து, திகதி வழங்கப்பட்ட 36 வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இந்த பரிசோதனைகளை தனியார் மருத்துவமனைகளில் செய்வதாயின், ஒரு இலட்சத்துக்கும் அதிகமாக செலவிட வேண்டியிருக்கிறது.

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ளவர்கள் அருகில் உள்ள கண்டி மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளுக்கு செல்லலாம். ஆனால், ஊவா மாகாணம் அப்படியல்ல. நோயை சுமந்துகொண்டு நோயாளர்களால் அவ்வளவு தூரம் பயணிக்க முடியாது.
என்ஜியோகிராம் கருவியின் விலை சுமார் 25 கோடியாகும். அக்கருவியை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லாவிடினும், எமக்கு அனுமதி அளித்தால், நாம் தனவந்தர்களிடமும் ஏனையோரிடமும் நிதி திரட்டி, இக்கருவியை கொள்வனவு செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். பதுளை பொது வைத்தியசாலைக்கு நாளொன்றுக்கு சுமார் 20 பேர் வரை இதய நோய் சம்பந்தமான சிகிச்சைகளுக்காக வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஏழைகள். எமது கண்முன்னே நாங்கள் சிகிச்சை வழங்கும் நோயாளர்கள், நோய்களை கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாமல் எமது கண்முன்னேயே மரணிப்பதை பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளதுஇந்த கருவிகள் இருந்தால் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை எம்மால் காப்பாற்ற முடியும். ஆகவே, அரசாங்கமும் உரிய தரப்பினரும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .

Exit mobile version