ஒட்டுமொத்த இணைய உலகமே இப்போது சாட் ஜிபிடி குறித்தே பேசி வருகிறது. இதற்கிடையே சாட் ஜிபிடிக்கு போட்டியாகக் கூகுள் நிறுவனம் அதிரடியாக புதிய ஏஐ கருவியைக் கொண்டு வந்துள்ளது.
கடந்த சில காலமாகவே ஒட்டுமொத்த நெட்டிசன்களும் ChatGPT குறித்தே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்க ChatGPT இயங்குகிறது.
இதற்கு முன்பும் கூட பல ஏஐ கருவிகள் சந்தைக்கு வந்திருந்தாலும் இந்தளவுக்கு வலிமையான ஒன்றை யாருமே பார்த்தது இல்லை. இது நிச்சயம் தொழில்நுட்ப துறையில் மிகப் பெரிய புரட்சியை நிகழ்த்தும் என்றே வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்த ChatGPT மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது தேடுபொறியில் இணைத்துள்ளது. பணம் கொட்டும் தேடுபொறி சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூகுளிடம் தனது இடத்தை மொத்தமாக இழந்து இருந்தது. இப்போது ChatGPT துணையுடன் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இறங்கியுள்ளது. இது கூகுள் நிறுவனத்திற்குப் பெரிய சிக்கலைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் கூகுளின் பெரும்பகுதி வருவாய் தேடுபொறியில் இருக்கும் விளம்பரங்களில் இருந்தே வருகிறது. விரைவில் அந்த நிலை மாறக்கூடும்
கூகுள் நிறுவனத்தின் பார்டு என்ற புதிய செயற்கை நுண்ணறிவு சாட்பாட் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் OpenAI எனும் நிறுவனத்தால் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாட்ஜிபிடி எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி, குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்தது, பல்வேறு நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்தது.
இந்நிலையில், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதியதாக பார்டு என்ற உரையாடல் நிகழ்த்தும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
LaMDA எனும் உரையாடல் பயன்பாட்டுக்கான மொழி அப்ளிகேஷன் என்ற தளத்தின் கீழ் பார்டு சாட்பாட் இயங்கவுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.