Site icon Colourmedia News

ஷானி அபேசேகரவின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு

ஷானி அபேசேகரவின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் மோட்டர் வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றதாகவும், ஷானி அபேசேகரவின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சம்பவம் இடம்பெற்ற போது ஷானி அபேசேகர வீட்டில் இல்லை எனவும், சம்பவம் தொடர்பில் கான்ஸ்டபிள் ஷானி அபேசேகரவிற்கு அறிவிக்கவில்லை எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஷானி அபேசேகர குறித்த காரிற்கு எரிபொருள் நிரப்ப சென்றபோது, ​​அதில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதை அடையாளம் கண்டு, பழுதுபார்ப்பதற்காக அனுப்பியபோது, ​​துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலால் ஏற்பட்ட ஓட்டை என்று கண்டுபிடித்தார்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வீட்டின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளினால் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பொரளை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு அறிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம், பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அவரின் பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version