Site icon Colourmedia News

அகிலம் போற்றும் அண்ணல் நபியின் ஜனன தினம் (சிறப்பு கட்டுரை)

கட்டுரை எம்.இஸட்.ஷாஜஹான்

அகிலம் போற்றும் அண்ணல் நபியின் ஜனன தினம்

அகிலம் போற்றும் அண்ணல் நபியின் ஜனன தினம் இன்றாகும். உலகெங்கும் வாழுகின்ற முஸ்லிம்கள் பெரு மகிழ்வோடு இதனை கொண்டாடுகின்றனர்.
உலகை சீர்;த்திருத்த வந்த மாநபியின் வாழ்க்கை வரலாறு உலக மக்களுக்கு படிப்பிணையாக அமைந்துள்ளது. அண்ணலாரின் சொல் செயல்கள் யாவும் மனித வாழ்க்கைக்கு மிகச் சிறந்த முன்னுதாரணங்களாகும். நபி பெருமானாரின் வாழ்க்கை முழுவதும் நடந்துள்ள சம்பவங்கள் நபியின் மாபெரும் சிறப்புக்களையும் கண்ணியத்தையும் வெளிக்காட்டுகிறது.
உலகுக்கு பேரொளியாக உதித்த நபிபெருமானார் அவர்கள் அன்றை ‘ஜாஹிலிய’ கால அறியாமை இருளை அகற்றினார். மனம்போன போக்கில் வாழ்ந்த மக்களை சீர்த்திருத்தினார். முஹம்மத் நபியவர்கள் மனித குலத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார். அவர்களின் வருகையே மனித குல மீட்சிக்கு அடித்தாளமிட்டது.

அல்குர்ஆன் நபியவர்களின் சிறப்பை பின்வருமாறு கூறுகிறது
(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர் (அல்குர்ஆன் 68:4)

நபியவர்களின் நற்பண்புகளும் சிறப்புகளும்

நபியவர்களிடம் சிறுவயதிலிருந்தே வாய்மையுடைமை, தீமையின்மை, தூய ஒழுக்கம், கண்ணிய உணர்ச்சி , கட்டுப்பாடான தன்மை, உதவி செய்யும் மனப்பான்மை, கடைமையுணர்வு, நம்பிக்கைக்கு மாறு செய்யாமை, இரக்க மனப்பான்மை, மனித நேயம் போன்ற இன்னோரன்ன அருங்குணங்கள் அளவற்றுக் காணப்பட்டன.

நபியவர்களின் வாலிப பருவத்தில் அவர்களின் நேர்மையையும் அவர்கள் இறைவன் மீது கொண்டிருந்த அளவற்ற பற்றையும் குறித்து மக்கள் எல்லோரும் பரவலாகப் பேசினார்கள். அண்ணலரை சுட்டிக்காட்டி ‘இதோ! நம்பிக்கைக்குரிய மனிதர் சென்று கொண்டிருக்கிறார்கள்’ என்று அவர்களை மக்கள் பாராட்டினர்.

வள்ளல் நபியவர்களின் சொல்லும் செயலும் குர்ஆனாகவே இருந்தது. ஒரு தடைவை ஆயிஸா (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து நபியவர்களின் பண்புகளை குறித்து கூறுமாறு கேட்டார்கள்.
அதற்கு ஆயிஸா (ரலி) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்.

‘அவர்களின் பண்புகளைக் குறித்து கூறவேண்டுமா? திருக்குர்ஆனின் கட்டளைகளையே அவர்கள் போதித்தார்கள். அதன் போதனைகளே அவர்களின் செயல்களாக விளங்கின. அதில் கூறப்பட்ட கட்டளைகளுக்கேற்பவே நடந்து காட்டினார்கள். அவர்களின் ஒவ்வொரு செயலும் அல்குர்ஆனின் போதனையாய் விளங்கிற்று’ என பதிலளித்தார்கள்.

நபியவர்கள் தமது நாற்பதாவது வயதில் ‘ஹிராக் குகையில் இறை வணக்கம் செய்து கொண்டிருக்கையி;ல், அவர்களுக்கு அல்குர்ஆனின் முதல் ‘வஹி’ (இறை அறிவிப்பு) அருளப்பட்டது.. இவ்வேத வெளிப்பாட்டின் மூலம் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரானார்கள்.

ஹிராக் குகையில் வைத்து நபியவர்களுக்கு இறக்கப்பட்ட அந்த இறை அறிவிப்புக்குப் பிறகு நபியவர்கள் அன்னை கதீஜா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அண்ணல் நபியவர்களின் முகத்தில் பதற்றத்தின் அறிகுறிகள் தென்பட்டன.

‘தங்களுக்கு என்ன நடந்தது? ஏன கதீஜா (ரலி) அவர்கள் கேட்டார்கள்.
நடந்த நிகழ்ச்சி முழுவதையும் மனைவியிடம் கூறிய நபியவர்கள்’ என் போன்ற பலவீனமான மனிதனால் இச்சுமையை எவ்வாறு சுமக்க முடியும்? என்றார்கள்.

இதற்கு கதீஜா (ரலி) அவர்கள் ‘இறைவன் மீது ஆணையாக அவன் தங்களுக்கு இவ்வசனங்களை அருளியதன் நோக்கம் தாங்கள் தோல்வியுற்றவர்களாகவும், தங்களின் குறிக்கோள்களில் தாங்கள் வெற்றிபெறாதவர்களாகவும் ஆகிவிட வேண்டு என்பதற்கன்று. மேலும் இறைவன் உங்களுடன் இருப்பதை கைவிடுவதற்கும் அன்று. அவன் ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டான்.

தாங்களோ உயர்ந்த பண்புகளைப் பெற்றுத் திகழ்கின்றீர்கள். உறவினர்களுடன் இனிமையாக நடந்துகொள்கின்றீர்கள். உதவியற்றவர்களின் சுமையை சுமக்கின்றீர்கள். நாட்டிலிருந்து அழிந்துவிட்ட நற்பண்புகளெல்லாம் தங்களின் மூலம் மீண்டும் நிலை நாட்டப்படுகின்றன. விருந்தோம்பல் செய்கின்றீர்கள். உண்மையான துன்பத்திற்குள்ளான மக்களுக்கு உதவி செய்கிறீர்கள். இவ்வாறான உயர்ந்த பண்புகளைக்கொண்ட மனிதனை இறைவன் சோதனைக்காளாக்கி விடுவானா? என்றார்கள். (புகாரி)

சமாதானத் தூதர் சாந்தி நபி

இஸ்லாம் என்ற பதத்தின் கருத்து சாந்தி, சமாதானம், சகோதரத்துவம் என்பதாகும். நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் யாவுமே சாந்தி, சமாதானம், சகோதரத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அவரது முழு வாழ்க்கையும் அதுவாகவே அமைந்துள்ளது.

அந்த வகையில் நபியவர்கள் சமாதானத்தை நிலை நிறுத்துவதில் அளித்த பங்களிப்பை வரலாறு சான்று பகிர்கிறது.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து ‘உங்களில் தொழுகை, நோன்பு , ஸக்காத் இவைகளைவிடவும் மேன்மையான நன்மைத் தரக்கூடிய காரியத்தை அறிவிக்கட்டுமா? அதுதான் உங்கள் இருவருக்கிடையில் சமாதானம் செய்து வைத்தல்’ என்று கூறினார்கள்.

அண்ணல் நபியவர்கள் மக்காவில் சமாதானத்தை நிலை நிறுத்த முயன்றாலும், மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றதன் பின்னர் அதில் பெரு வெற்றி கண்டார்கள். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் புதியதொரு சமூகத்தின் தலைவர் என்ற வகையில் மதீனா சென்றதும் பல ஆரம்ப நடடிக்கைகளையும் சில அமைப்புகளையும் உடனடியாக செய்ய வேண்டியிருந்தது.

அங்கு நபியவர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் இஸ்லாமிய சமூக அமைப்புக்காக சமாதானத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட திட்ட அம்சங்களாகும்.

அன்று ஹவுஸ், கஸ்ரத் கூட்டத்தாருக்கு மத்தியில் பரம்பரையாக இருந்து வந்த குலச் சண்டையை நீக்கி இரு கூட்டத்தாருக்குமிடையில் சமாதானத்தை செய்து வைத்து சகோதரத்ததுவ ஒற்றுமையை நிலை நிறுத்தினார்கள்.

அதேவேளை, மக்காவிலிருந்து மதீனாவிறு ஹிஜ்ரத் செய்த முஹாஜிரீன்களுக்கும் மதீனாவாசிகளான அன்சாரீன்களுக்குமிடையில் இஸ்லாமிய சகோதரத்துவப் பிணைப்பினை ஏற்படுத்தினார்கள். இதன் மூலம் சகோதரத்துவத்தின் வழி பிறப்பதுதான் சமாதானம் என்ற கோட்பாடு நிலை நிறுத்தப்பட்டது.

முஸ்லிம்களுக்கிடையில் சமாதானத்தை நிலை நிறுத்தியதைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கிடையேயும் ஏனைய சமூகத்தினருக்கிடையேயும் ஜக்கியத்தையும் ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் வளர்த்துக்கொள்வதற்கு இரு தரப்பினருக்கும் பொதுவான் அரசியலமைப்பை தழுவிய ஓர் சமாதன உடன்படிக்கையை செய்து கொண்டார்கள்.

இது ஒருபக்கத்தில் முஹாஜிரீன்களையும் அன்சாரீன்களையும் மறுபக்கத்தில் யூதர்களையும் மதீனாவில் வாழ்ந்த ஏனைய கோத்திரத்தவர்களையும் கருத்திற்கொண்டு வரையப்பட்டதாகும். அது மதீனா சாசனம், மதீனா பிரகடனம், மதீனா பட்டயம் என அழைக்கப்படுகிறது.

முஹம்மது நபியவர்கள் சமாதான விருப்பம் கொண்டவர்கள் என்பதை இன்னொ சம்பவமும் எடுத்துக்காட்டுகிறது. சமாதான விரும்பியான வள்ளல் நபியவர்கள் மக்கா குறைஷியர்களுடன் செய்துகொண்ட ‘உதைபியா உடன்படிக்கை’ அதுவாகும். இந்த உடன்படிக்கையை மக்காவாசிகள் இரண்டே ஆண்டகளில் ‘பனூகுஸாஆ’ வம்சத்தினரை தாக்கியதன் மூலமாக மீறினார்கள். நபியவர்கள் பத்தாயிரம் முஸ்லிம்களுடன் மக்காவை நோக்கிப் படையெடுத்தார்கள்.

இரத்தம் சிந்தாமல் மக்கா கைப்பற்றப்பட்டது. மக்கா இஸ்லாத்தின் வசமானது. ஹிஜ்ரி 8 இல் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் எதிரிகள் எதிர்பாராதவாறு அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. இது நபியவர்களின் உயர்ந்த பண்மை எடுத்துக்காட்டுவதுடன், அவர்கள் ஒரு சமாதான விரும்பி என்பதை விளக்கி நிற்கிறது.

மன்னர்களுக்கு நபியவர்கள் அனுப்பிய கடிதங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனவிற்கு சென்ற பிறகு இஸ்லாத்தை உலகின் எல்லா பகுதிகளுக்கும் பரப்பினார்கள். நபியவர்கள் இந்த விருப்பத்தை தங்கள் தோழர்களிடம் கூறினார்கள். கி.பி. 628 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் அண்ணல் நபியவர்கள் எழுதிய முத்திரையிடப்பட்ட (‘முஹம்மது ரஸுலுல்லாஹ்’ எனும் சொற்களைப் பதித்த) கடிதங்களை எடுத்துக் கொண்டு நபி தோழர்களுள் பலர் பல்வேறு நாடுகளை நோக்கி புறப்பட்டார்கள்.

ரோமானிய மன்னர் ஹெரா கிளியஸ், ஈரான் மன்னர், அபீஸீனிய மன்னர் நஜ்ஜாஸி, எகிப்திய மன்னர் முகவ்கிசு ஆகியோருக்கும் மேலும் பல அரசர்களுக்கும் நபியவர்கள் இஸ்லாத்தின் தூதுச் செய்தியை எட்ட வைத்தும், முன்னறிவிப்புக்களை தெரிவித்தும் மேலும் சில விடயங்களை குறிப்பிட்டும் கடிதங்களை அனுப்பினார்கள்.

இவ்வாறு இஸ்லாத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்காக செயற்பட்டார்கள்.

பிற மதத்தவர்களால் போற்றப்படும் அண்ணலார்

ரஷ்ய தத்துவ மேதை டால்ஸ்டாய் ‘ மனிதனை எடைபோடும் அளவு கோல ஒன்றிருப்பின் அது முஹம்மத் (ஸல்) அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற தோமஸ் கார்லீல் என்பவர் ‘வீர்கள்’ என்னும் தனது புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார். ‘இஸ்லாம் மார்க்கம் பொய் என்றும் முஹம்மது நபியவர்கள் பொய்யர், ஏமாற்றுபவர் என்றும் இக்காலத்தில் ஒருவர் கூறுவது மாபெரும் இழிவாகும்.’

மைக்கல் ஹார்ட் என்பவர் ‘ வரலாற்றில் நூறு பேர்’ என்னும் தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார். ‘முஹம்மது நபியவர்களை மனித வரலாற்றில் மிகச் சிறந்த முக்கியத்துவம் வாய்ந்தவரிகளில் முதலானவராக நான் எனது புத்தகத்தில் தேர்ந்தெடுத்திருப்பது சில வாசகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கலாம். காரணம் வரலாற்றிலேயே மார்க்கம் மற்றும் உலகம் இவ்விரு துறைகளிலும் வெற்றியின் உச்சத்தை அடைந்த ஒரே மனிதர் அவர்கள்தான்.’

இன்றைய தினத்தில் சிந்திப்போம்

உலகம் புகழும் உத்தமத் தூதரின் பிறந்த தினத்தை கொண்டாடும் இன்றைய தினத்தில்
நபியவர்களின் போதனைகளைப் பற்றியும் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபியவர்கள் கூறியபடி, வாழ்ந்து காட்டியபடி நாங்கள் வாழ்கின்றோமா? ஏன்று ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்டுப்பார்க்க வேண்டும்.

வள்ளல் நபியவர்களுக்கு ‘ஜனன தின விழா’ கொண்டாடுவதோடு நின்றுவிடாது, அவர்கள் சொல்லிலும்; செயலிலும் காட்டியதை முழுமையாக பின்பற்றி உண்மையான முஸ்லிமாக வாழ்வதற்கு ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணவேண்டும்.
அனைவருக்கும் சீரத்துந் நபி தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Exit mobile version