Site icon Colourmedia News

சுரேஷ் பிறேமச்சந்திரன்  வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு

மலையக தேயிலை இறப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்திய தமிழ் மக்கள் பிரிட்டிஷாரினால் அழைத்துவரப்பட்டு, நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. பிரித்தானியாவும் இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டது. 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தபொழுதும், பெருந்தோட்டப் பகுதியில் வாழக்கூடிய மலையகப் பாட்டாளி வர்க்கம் இன்னும் தமது நாளாந்த வேதனங்களுக்காகப் போராடி வருகின்றது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, இருப்பிடம், பாதுகாப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும் இன்னமும் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமுதாயமாகவே இருந்து வருகின்றார்கள். அது மாத்திரமல்லாமல், சுதந்திரம் அடைந்ததாகக் கூறிக்கொள்ளும் ஒரு நாட்டில் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை அனைத்தும் பறிக்கப்பட்டு, அவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதும் இந்த மண்ணில் நடைபெற்றது. அத்தகைய ஒரு சமுதாயத்திற்குத் தலைமைதாங்கி, அவர்களை ஓரணியில் திரட்டி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தையும் ஓர் அரசியல் கட்சியையும் உருவாக்கி, அதனைத் தலைமையேற்றுத் திறம்பட வழிநடத்தியவர்தான் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். மலையக மக்களின் ஒவ்வொரு உரிமைக்காகவும் அவர் மிக நீண்டகாலமாக தனது மக்களை அணிதிரட்டி நாடாளுமன்றத்திலும் வெளியிலும் போராடி வந்திருக்கின்றார்.

இன்றைக்கு மலையகத் தமிழ் மக்களுக்கு ஒரு குறைந்தபட்ச உரிமைகள், சலுகைகள் கிடைத்திருக்கிறதென்றால் அதற்கு மூல காரணமாக இருந்தவரும் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களே. அவரது மரணத்திற்குப் பின்னர், மலையக மக்களின் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் கட்சியையும் தலைமையேற்றி வழிநடத்திச் சென்றவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் பேரனான அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களே

மலையக மக்களின் தேவைகளும் பிரச்சினைகளும் இன்னமும் பல நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான கடமையும் பொறுப்பும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவை. அந்த வகையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு ஒரு பாரிய கடமை தொடர்ந்தும் இருந்துகொண்டே இருந்தது. அதனைப் பொறுப்புடன் வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்த கட்சியை எதிர்காலத்தில் தலைமைதாங்கிச் செயற்படக்கூடிய அனைவருக்கும் உரியது.

அமரர் திரு. ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் இளம் வயதிலிருந்தே தமது தாத்தாவான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுடன் இணைந்து பணியாற்றியவர். அவரது செயலாளராகக் கடமையாற்றியவர். இதன் காரணமாக மலையக மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் நுணுக்கமாக அறிந்துகொண்டவர். தொழிற்சங்கத்தைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் ஆழமாகப் புரிந்துகொண்டவர். கம்பெனி முதலாளிகளுடன் தமது மக்களுக்காகப் பேரம் பேசுவதிலும் வல்லமை கொண்டவர். இவ்வாறான பல்வேறு திறமைகள் இருந்ததன் காரணமாகத்தான் மலையகத் தமிழ் மக்களின் தலைவராகத் திகழ்ந்தார். அவர் அரசியலில் இன்னமும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருந்தது. ஆனால் காலம் அவரை விரைவிலேயே தன்வசப்படுத்திக்கொண்டதானது மலையக மக்களை பெரும் துன்பக் கடலில் ஆழ்த்தியுள்ளது. அவர் அமைச்சராக இருந்த காலத்தில் இனம், மதம், சாதி என்று பாராமல் அனைவருக்கும் உதவியாக இருந்தார்.

Exit mobile version