பெப்ரவரி ஆரம்ப பகுதியில் தேர்தல்
உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீதான இடைக்கால தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்கு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் எஞ்சியுள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்கான வேட்பு கோரலுக்கான அறி்விப்பு டிசம்பர் மாதம் நான்காம் திகதி விடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதை நிறுத்துமாறு கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மீதான விசாரணையின் போது கடந்த வாரம் குறித்த வர்த்தமானியை இடைநிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பபட்டிருந்தது.
எனினும் தற்போது குறித்த மனுவை தாக்கல் செய்த தரப்பினர் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து குறித்த மனுவை மீளப் பெறுவதற்கு நேற்றைய தினம் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதன்படி நேற்றைய தினம் அது தொடர்பில் ஆராய்ந்த மேன் முறையீட்டு நீதிமன்றம் வர்த்தமானி மீதான இடைக்கால தடையை நேற்று நீக்கிக் கொண்டது.
இந்நிலையில் ஏற்கனவே 93 உள்ளூராட்சிமன்றங்களுக்கு வேட்பு கோரப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது இடைக்கால தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்கான வேட்பு மனுத் தாக்கலுக்கான அறிவிப்பு டிசம்பர் மாதம் நான்காம் திகதி விடுக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.