ஒரு பணியாளர் ஏற்கக் கூடிய காரணமின்றி வேலைக்கு சமுகமளிக்காமை, ஏற்கக் கூடிய காரணமின்றி தாமதமாக வேலைக்கு வருதல், பணியாளரின் கவனக் குறைவால் ஏற்படும் சொத்துக்களுக்கான சேதங்கள், சோம்பியிருத்தல், வேலை நேரத்தில் மதுபோதையிலிருத்தல் ஆகியன குற்றங்களாகும்.
வேண்டுமென்றே கீழ்ப்படியாமையும் ஒழுக்க மீறலும், நுகர்வோரிடத்தில் கண்ணியமின்மையுடன் உபத்திரவம் கொடுத்தல், பிழையான அல்லது தவறான வழிநடத்தல்களுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல், பொய்யான சுகவீனம் அல்லது உதாசீனம், வேலைத்தலத்திலமைந்துள்ள பாதுகாப்பு இயந்திரங்களை தேவையில்லாது தொடுதல், அனுமதி இன்றி வேலைத் தளத்தில் அறிவித்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல் மற்றும் விநியோகித்தல், வேலைத் தலத்தின் துப்புரவு பற்றிய அறிவுறுத்தல்களை மீறுதல், தடை செய்யப்பட்ட பிரதேசத்தில் புகைபிடித்தல் ஆகியவையும் தண்டனைக்குரிய குற்றங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
வேலையாட்களுக்கு சம்பளம் வழங்க வேண்டிய காலமும் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாரத்திற்கு ஒருமுறை சம்பளம் வழங்கப்படுவதனால் குறித்த வார முடிவடைந்து மூன்று நாட்களுக்குள் வழங்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்கப்படுவதாயிருந்தால் குறித்த இரண்டு வாரங்கள் கடந்து ஐந்து நாட்களுக்குள்ளும் மாதம் ஒருமுறையென்றால் குறித்த மாதம் முடிவடைந்து பத்து நாட்களுக்குள்ளும் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
இருப்பினும் வேலையாள் வேலைக்குச் சமுகமளிக்காதவிடத்து மேற்குறிப்பிட்ட கால எல்லையுள் சம்பளம் வழங்க முடியாது போகும் போது அவர் வேலைக்கு சமுகமளித்த அன்றே சம்பளம் வழங்க வேண்டும். வேலையாளின் சேவையை முடிவுறுத்தும் போது இரண்டு வேலை நாட்களுக்குள் உரிய சம்பளத்தை வழங்குதல் வேண்டும்.
வேலையாட்களின் விபரத்தைக் கொண்ட சம்பளப் பதிவேடொன்று தொழில் தருனரால் (முதலாளி) பேணப்பட வேண்டும்.
அந்தப பதிவேடு சம்பளக் கால எல்லை முடிவடைந்து ஆறு வருடங்கள் முடியும் வரை பாதுகாத்து வைத்திருக்கப்படுதல் வேண்டும்.
எவராவது அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அலுவலரால் பரிசீலனைக்குத் தேவை ஏற்படும் போது குறித்த சம்பளப் பதிவேடு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பௌர்ணமி தினம்(போயா தினம்), வணிக விடுமுறைகள்(Mercantile holidays) தொழிலாளருக்கான விடுமுறை தினமாகும். குறித்த தினத்தில் வேலை செய்ய வேண்டி ஏற்படின் கடமை புரியும் காலத்திற்கு வழக்கமாக நாளொன்றிற்கு வழங்கும் சம்பளத்தைப் போன்று ஒன்றரை மடங்கு வழங்க வேண்டும்.
தொழிலாளி அல்லது தொழிற்சங்கம் கேட்கும் பட்சத்தில் சம்பள விபரம் தொழிலாளிக்கு வழங்க வேண்டும்.
எந்தவொரு வேலை தருனரும் (முதலாளி) தொழிலாளிக்குச் சம்பளம் கொடுக்கவில்லையென்று நிரூபிக்கப்பட்டாலோ, சம்பள ஏடு ஒன்றைப் பேணாதவிடத்திலோ அல்லது தேவையேற்படும் போது பரிசீலனைக்காகச் சமர்ப்பிக்காத போதோ எழுத்து மூலமாகவும், சாட்சியங்கள் மூலமாகவும் பெறப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாக் கொண்டு செலுத்தப்படாத சம்பளத்தை தொழில் தருணிடமிருந்து அறவிட்டுக் கொள்ளத் தொழில் ஆணையாளருக்கு அதிகாரம் உள்ளது.
நாடு முழுவதும் பரந்துள்ள அல்லது நாட்டின் ஒரு பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஏதாவது குறிப்பிட்ட தொழிலுக்கோ சேவைக்கோ அது தொடர்பான சம்பள சபையொன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின்படி அல்லது தொழில் அமைச்சரின் தீர்மானத்தின்படி குறித்த ஒவ்வொரு தொழிலுக்குமாக தனித்தனியான சம்பள சபைகள் அமைக்கப்படும்.
இச்சபையில் முத்தரப்பினர் இடம்பெறுவர். தொழிலாளர் தரப்பு, தொழில் வழங்குனர் (முதலாளி) தரப்பு, அரசுத் தரப்பு என்பனவே அவை.
இச்சம்பள சபைகள் காலத்திற்குக் காலம் கூடி எடுக்கும் தீர்மானங்கள், அரச வர்த்தமானியிலும், அதேபோன்று மூன்று மொழிகளிலும் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்படும். அதற்கு ஏதாவது எதிர்ப்புகள், விமர்சனங்கள் இருப்பின் அவற்றைப் பெற்று மீண்டும் சம்பள நிர்ணய சபை கூடி ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுக்கும்.
அது தொழில் அமைச்சரின் அங்கீகாரத்தைப் பெற்றதன் பின்னர் மீண்டும் அரசாங்க வர்த்தமானியிலும், பத்திரிகைகளிலும் மூன்று மொழிகளிலும் பிரசுரிக்கப்படுவதுடன் சட்டபூர்வமாகும்.