நான்காம் தரத்தில் கல்வி பயிலும் 9 வயதுடைய மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியலையும் வரும் 20ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அர்ச்சகரின் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா பிணை விண்ணப்பம் செய்தபோதும் பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் கடுமையான ஆட்சேபனையை முன்வைத்த நிலையில் சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பம் நிராகரித்து விளக்கமறியலை நீதிமன்றம் நீடித்தது.
கடந்த நவம்பர் 27ஆம் திகதி பாடசாலையில் சிறுமி அலைபேசி வைத்திருப்பதை ஆசிரியர் கண்டறிந்தார். இதுதொடர்பில் சிறுமியிடம் விசாரித்த போது, வல்வெட்டித்துறை ஆலயம் ஒன்றின் அர்ச்சகர் வாங்கி கொடுத்ததாகவும் அவர் அலைபேசி மூலம் பிரசாதம் தர கூப்பிடுவதாகவும் சிறுமி கூறியுள்ளார்.
சிறுமியின் தகவலில் சந்தேகம் கொண்ட ஆசிரியர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறிவித்தார். அவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அர்ச்சகர் தன்னை ஆலய மடப்பள்ளியில் வைத்து துன்புறுத்தலுக்குள்ளாகியதாகவும் தனக்கு அதிகளவான பணத்தை அவர் தந்ததாகவும் சிறுமி விசாரணையில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தனது சித்தப்பா ஒருவரும் இவ்வாறு தன்னை துன்புறுத்துவதாகவும் சிறுமி தெரிவித்திருந்தார்.
அத்துடன், அர்ச்சகரால் வழங்கப்பட்ட பணம் ஒருதொகையையும் சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சிறுமியின் அலைபேசி சிம் அட்டை அர்ச்சகரின் பெயரிலேயே இருந்துள்ளது.
இந்நிலையில் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 72 வயது அர்ச்சகரும் சிறுமி சித்தப்பாவான 50 வயதுடைய குடும்பத்தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.