பதிவு -சனத் சுடர்.
1946 முதல் 2019 வரை ஐ.தே.கவை ஆண்ட தலைவர்கள் விபரம்…….
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியில் கால்நூற்றாண்டுக்கு பின்னர் மாற்றம் இடம்பெறவுள்ளது.
இதன்படி புதிய தலைவராக சஜித் பிரேமதாச அல்லது கருஜயசூரிய நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய தலைவரை தெரிவுசெய்வதற்காக ஐ.தே.கவின் தேசிய மாநாடு டிசம்பர் இறுதி வாரத்துக்குள் கூடும் சஜித் ஆதரவு அணி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
1994 நவம்பர் 12 ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க கடந்த 25 ஆண்டுகளாக அப்பதவியில் நீடிக்கிறார்.
பதவி விலகுமாறு பல தடவைகள் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோதிலும் – அவற்றையெல்லாம் சாதூர்யமாக சமாளித்து – சர்ச்சைகளுக்கு மத்தியிலும் தன்நம்பிக்கையுடன் தலைவராக வலம் வந்தார் ரணில்.
தேர்தல்களில் தோல்விகள் தொடர்ந்தாலும் – நெருக்கடிகள் தலைதூக்கும் வேளைகளில், தலைமைத்துவ சபை உருவாக்கம் ,கட்சி மறுசீரமைப்புக்காக விசேட குழு அமைப்பு என பலவியூகங்களை கையாண்டு வழமையாக இழுத்தடிப்பு செய்யும் ரணில் விக்கிரமசிங்க, இம்முறை விட்டுக்கொடுப்பு செய்துள்ளதை பல தரப்பினரும் பாராட்டி வரவேற்கின்றனர்.
மறுபுறத்தில் இது தந்திரோபாய பின்வாங்கல் என்றும், சஜித்துக்கு வைக்கப்பட்டுள்ள மரணப்பொறி என்றும் மாறுபட்டகோணத்திலும் விமர்சனக்கணைகள் தொடுக்கப்பட்டுவருகின்றன.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப் பதவியை வகித்தவர்கள் விபரம் வருமாறு,
1.டி.எஸ். சேனாநாயக்க
1946 செப்டம்பர் 6 ஆம் திகதியே ஐக்கிய தேசியக்கட்சி உதயமானது. அதன் ஸ்தாபகத் தலைவராக டி.எஸ். சேனாநாயக்க நியமிக்கப்பட்டார்.
காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரமடைய வேண்டும் என அரசியல் ரீதியில் தலைமைத்துவம் வழங்கியவர்களில் இவர் பிரதானமானவர்.
1947 ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 20 வரை 19 நாட்கள் நடைபெற்ற இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக்கட்சி 42 ஆசனங்களைக் கைப்பற்றி – ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் அரியணையேறியது.
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமராக தேசப்பிதா டி.எஸ். சேனாநாயக்க பதவியேற்றார். புரட்சிகரமான திட்டங்களையும் முன்னெடுத்தார்.
டி.எஸ். சேனாநாயக்க 1952 மார்ச் 22 ஆம் திகதி அகால மரணமடைந்தார்.
2.டட்லி சேனாநாயக்க
தந்தையின் மறைவின் பின்னர், மகனான டட்லி சேனாநாயக்க 1952 மார்ச் 26 ஆம் திகதி இலங்கையின் 2 ஆவது பிரதம அமைச்சராக பதவியேற்றார். கட்சியின் தலைமைப் பதவியையும் வகித்தார்.
அதன்பின்னர் குறுகிய காலப்பகுதிக்குள் – அதாவது 1952 ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.
இதன்படி 1952 மே 24 ஆம் திகதி முதல் 30 வரை 4 நாட்கள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் 44.08 சதவீத வாக்குகளுடன் ஐக்கிய தேசியக்கட்சி 54 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. பிரதமராக டட்லி சேனாநாயக்க தெரிவுசெய்யப்பட்டார்.
1952 இல் இறுதிக்காலப்பகுதியில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக அரிசி விலை அதிகரிப்பானது அரசாங்கத்துக்கு பேரிடியாக அமைந்தது.
மறுபுறத்தில் இடதுசாரிகட்சிகளும் போராட்டங்கள்மூலம் தலையிடிகொடுத்தன.இதனால் 1953 ஒக்டோபர் மாதம் பிரதமர் பதவியை டட்லி சேனாநாயக்க இராஜினாமா செய்தார்.
3.சேர்.ஜோன் கொத்தலாவ
டட்லி சேனாநாயக்க இராஜினமா செய்ததையடுத்து, ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளராக செயற்பட்ட சேர்.ஜோன் கொத்தலாவ புதிய பதவியேற்றார்.
1953 ஒக்டோபர் 12 முதல் 1956 ஏப்ரல் 12வரை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராகவும் செயற்பட்டார்.
பிரதமராக புரட்சிகரமான சில திட்டங்களை முன்னெடுத்திருந்தாலும், கட்சியை உரிய வகையில் கட்டியெழுப்ப முடியாமல் போனது.
ஆங்கில மொழிக்கு முன்னுரிமை, பிக்குகள் மதிக்கப்படாமை உட்பட மேலும் சில காரணங்களால் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம்மீது மக்கள் கடும் அதிருப்தியில் காணப்பட்டனர்.
மாற்று தேர்வாக – தேசியத்தை முன்னிலைப்படுத்திய சுதந்திரக்கட்சிமீது நம்பிக்கை வைத்தனர். பௌத்த தேரர்களும் ஓரணியில் திரண்டனர்.
இதனால் 1956 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.சேர்.ஜோன் கொத்தலாவ 1980 ஒக்டோபர் 02 ஆம் திகதி காலமானார்.
4. டட்லி சேனாநாயக்க
1956 இல் நடைபெற்ற இலங்கையின் 3 ஆவது பொதுத்தேர்தலில் 51 ஆசனங்களைக் கைப்பற்றி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரியணையேறியது.
ஆளுங்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
14 ஆசனங்களைக் கைப்பற்றிய லங்கா சமசமாஜக்கட்சி மீண்டும் பிரதான எதிர்க்கட்சியானது.இதனால் ஐ.தே.கவின் தலைமைப்பொறுப்பு 1956 இல் மீண்டும் டட்லி சேனாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தினார். 1960 மார்ச் 19 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையில் 4 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 50 ஆசனங்களை வென்று ஆட்சியமைத்தது.
எனினும், பாராளுமன்றத்தில் சிம்மாசன உரையின் முடிவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஐ.தே.கவுக்கு தோல்வி ஏற்பட்டது.
இதனால் தேர்தல் நடைபெற்று 24 நாட்களுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்படி 1960 ஜீலை 20 ஆம் திகதி இலங்கையில் ஐந்தாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றதால் 1960 ஒகஸ்ட் 05 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவராக கடமையேற்றார்.
1964 டிசம்பர் 17 ஆம்திகதிவரை அப்பதவியில் நீடித்தார்.1965 மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றியை நோக்கி அழைத்துசெல்லும் வகையில் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கினார்.
1973 ஏப்ரல் 13 ஆம் திகதி காலமாகும்வரை கட்சி தலைவராக செயற்பட்டார்.
5. ஜே.ஆர்.ஜயவர்தன
1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி வெற்றிபெற்றது. 17 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றிய ஐக்கிய தேசியக்கட்சி எதிர்க்கட்சியானது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஜெ.ஆர். ஜயவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.
1973 இல் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியை ஜே.ஆர். ஜயவர்தன ஏற்ற பின்னரே அசுர வேகத்தில் கட்சி வளர்ச்சி கண்டது.
குறிப்பாக 1977 ஜீலை 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் 144 ஆசனங்களைக் கைப்பற்றி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஐ.தே.க. மீண்டும் அரியணையேறியது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மைபலம் இருந்ததால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை உருவாக்கி, 1978 பெப்ரவரி 4 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இவரே. 1982 ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் கட்சி தலைவராக வெற்றிநடைபோட்டார்.
அதன்பின்னர் 1982 டிசம்பர் 22 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பை நடத்திய பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடித்துக்கொண்டார்.
இலங்கை அரசியலில் இன்றளவிலும் பேசப்படுகின்ற ஓர் அரசியல் தலைவராக ஜே.ஆர். ஜயவர்தன விளங்குகிறார். 1973 முதல் 1989வரை ஐ.தே.க. தலைவர் பதவியை வகித்துள்ளார். 1996 நவம்பர் முதலாம் திகதி காலமானார்.
6. ரணசிங்க பிரேமதாச
1988 டிசம்பர் 19 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 2ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ரணசிங்க பிரேமதாச, 1989 ஜனவரில் ஐ.தே.கவின் தலைமைப் பதவியையும் பொறுப்பேற்றார்.
1982 இல் சர்வஜன வாக்கெடுப்புமூலம் பாராளுமன்ற ஆயுட்காலம் நீடிக்கப்பட்டதால் 89 இல்தான் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் ஐ.தே.க. வெற்றிநடைபோட பிரேமதாச சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கினார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் களமிறங்கும் எண்ணத்துடனேயே இருந்தார். எனினும், 1993 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி ரணசிங்க பிரேமதாச கொலை செய்யப்பட்டார்.
7. டி.பி.விஜேதுங்க
பிரேமதாசவின் மறைவின் பின்னர் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்ற டி.பி. விஜேதுங்க குறுகிய காலம் ஐ.தே.க. தலைமைப்பதவியையும் வகித்தார். 1994 நவம்பர் 12 ஆம் திகதிவரை ஐ.தே.க. தலைவராக செயற்பட்டார்.
8. ரணில் விக்கிரமசிங்க
1994 ஆம் ஆண்டு முதல் 2019வரை 25 ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிக்கிறார்.
புதிய தலைவரை தெரிவுசெய்வதற்காக ஐ.தே.கவின் தேசிய மாநாடு டிசம்பர் இறுதி வாரத்துக்குள் கூடும் சஜித் ஆதரவு அணி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளைய அடுத்த சிறப்பு கட்டுரை
இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்தவர்களின் விபரம் – 1947 -2018!