Site icon Colourmedia News

சிறிமா: இலங்கையின் மாபெரும் பெண் ஆளுமைகளுள் முதன்மையானவர்.

“ஸ்டேட்மேன்(stateman) என்ற வார்த்தையை இனியும் நாம் பயன்படுத்த முடியாது. ஸ்டேட் வுமன்(state woman) என்ற புதிய பதத்தை இனி நாம் உருவாக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம்” என 60 களில் வெளியான பிரபல வெளிநாட்டு ஆங்கிலப்பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன.அதற்கான காரணம் இலங்கையின் முதல் பெண் பிரதமர் பதவியை காலஞ்சென்ற பிரதமர் பண்டாரநாயக்கவின் துணைவியார் பெற்றுக்கொண்டமையே. அரசியல் என்ற ஆணாதிக்க உலகில் வெற்றிகொண்டு இன்றளவும் உலக வரலாற்றில் நிலையான பெயரை கொண்டுள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் வாழ்க்கை அரசியலில் வெற்றிகொள்ள நினைக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் முக்கிய பாடமாக இன்றளவும் உள்ளது.

சிறிமா: அரசியலுக்கு முன்னரான வாழ்க்கை

சிறிமாவோ ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்க, இலங்கையின் பிரபல்யம் மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்து இன்னொரு பிரபல்யம் மிக்க குடும்பத்திற்கு வாழ்க்கைப்பட்டு சென்ற ஒரு சாதாரண பெண். பிரதமரின் இல்லத்தரசி.ஜனாதிபதியின் அன்னை. அரசியல் எனும் பகடையாட்டத்துக்கு அன்று மறுப்பு தெரிவித்திருந்தால் மேற்கூறிய ஏதோ ஒன்றாக மட்டுமே இன்று நினைவு கூறப்பட்டிருப்பார். அரசியலுக்கு பின்னரான சிறிமாவின் வாழ்க்கை குறித்து பல்வேறு கருத்துக்களும்,விமர்சனங்களும் நிலவுகின்றது. இருப்பினும் ஒரு மகளாக, மனைவியாக, அன்னையாக சிறிமா கடந்துவந்த வாழ்க்கையின் அத்தியாயங்கள் பெரிதும் படிக்கப்பட்டதில்லை. அவற்றுக்கான ஒரு சிறிய முன்னோட்டத்தை காண்போம்.

1916 ஏப்ரல் 16ம் திகதி பார்னெஸ் ரத்வத்த திசாவ மற்றும் ஹில்டா மஹவெலத்தன்ன குமாரிஹாமி தம்பதிக்கு கிடைத்த முதல் குழந்தை சிறிமா. சிறிமா பிறந்த தருணத்தில் சுவாரசியகரமான நிகழ்வொன்று நடந்ததாக கூறப்படுகிறது. சிறிமா பிறந்த நேரத்தில் யானைக்கூட்டம் ஒன்று வீட்டின் வளவுக்குள் பலவந்தமாக நுழைந்தது. இது ஒரு நற்சகுனமாக கருதப்பட்டது. சிறிமாவின் ஜாதகத்தை கணித்த ஹேட்டுவ குருநான்ஸே சிறிமா இந்நாட்டின் அரசியாகும் யோகம் கொண்டவர் என்றார்.

அக்காலத்தில் இலங்கை பிரித்தானியாவின் குடியேற்றமாக இருந்த காரணத்தாலும், ‘அதெப்படி ஒரு பெண்ணால் நாட்டை ஆளமுடியும்?’ என்ற எண்ணமும் குருநான்ஸே கூறியது வெறும் வேடிக்கைப்பேச்சாகவே போய்விடும் என நினைத்துக்கொண்டார் பார்னெஸ். சிறிமாவை தொடர்ந்து 2 பெண் பிள்ளைகளும் 4 ஆண் பிள்ளைகளும் பிறந்தனர். மூத்த பெண் பிள்ளை என்ற வகையில் பல்வேறு சமூக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொழும்பு புனித பிரிஜேட்ஸ் கல்லூரியில் படிப்பை முடித்த சிறிமா நிறைவேற்ற வேண்டிய முக்கிய கடமையாக இருந்தது திருமணம். தன்னை விட 17 வயது மூத்த ஆத்தங்கள ஹொரகொல்ல வளவேயின் மஹாமுதலியாரான சாலமன் டபிள்யூ.ஆர்.டீ பண்டாரநாயக்கவை மணந்து கொண்டார் சிறிமா. சிறிமா பிறந்த குடும்பமானது கண்டி ராஜ்யத்தின் பிரதானி வரிசையில் ஒன்றான றாடல குடுபத்தின் வழிவந்தது.

மலைநாட்டு சிங்களவர்களிடையே இந்த குடும்பத்துக்கான மரியாதை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே பண்டாரநாயக்க குடும்பமானது கரைநாட்டு சிங்கள மக்களிடையே அந்தஸ்து பெற்றது. எனவே சிறிமா-சாலமன் திருமணம் மலைநாட்டு சிங்களவர்களுக்கும்,கரைநாட்டு சிங்களவர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒன்றிணைப்பாக பேசப்பட்டது.

1943 இல் திருமதி பண்டாரநாயக்க தன்னுடைய வாழ்வின் புதியதொரு பரிணாமத்திற்குள் அடியெடுத்து வைத்தார். சுனேத்ரா. சிறிமா-சாலமன் தம்பதியின் முதல் குழந்தை.1945 இல் இலங்கையை ஆட்சிபுரிவதற்கென இன்னொரு ஆட்சியாளரை வழங்கினார் சிறிமா.

அது இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரம் பெற்ற ஜனாதிபதியான சந்திரிகா. 1949 இல் அனுர என்ற மகனும் பிறந்தார். ஏறக்குறைய 20 வருடங்கள் பண்டாரநாயக்க உடன் சிறிமா நடத்திய இல்வாழ்வு இலங்கையின் அரசியல் வரலாற்றில் நிலையான பல தாக்கங்களை உருவாக்கியுள்ளது. ஆரம்பத்தில் சாலமன் பண்டாரநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்ததுக்கும், பின்னர் அதிலிருந்து விலகி சுதந்திர கட்சியை நிறுவியதற்கும் பின்னனியில் சிறிமாவின் அறிவுரைகளும், கருத்துக்களும் இருந்ததாக கருதப்படுகிறது.

பண்டாரநாயக்க அவர்கள் சாதாரண பாராளுமன்ற உறுப்பினரின் இருந்து எதிர்க்கட்சித்தலைவர், பிரதமர் என அரசியல் வளர்ச்சியை கண்டுவந்ததன் விளைவாக பண்டாரநாயக்க இல்லம் அரசியல் ஆலோசனை களமாக மாறியது.

பல அரசியல் ஆலோசனைகளின் போது சிறிமா ஒரு பார்வையாளராகவும், சில சமயங்களில் கருத்தாளராகவும் இருந்தமை பிற்காலத்தில் அவரது ஆட்சியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளுக்கான அடிப்படையாக இருந்தது. எனினும் சாலமனுக்கு தன்னுடைய மனைவி அரசியல் விடயத்தில் பங்கு கொள்வது அத்துணை உவப்பானதாக தெரியவில்லை. இதனை பல சமயங்களில் வெளியாட்கள் முன்னிலையில் சிறிமாவிடம் முன்வைத்தார்.

விதவையின் கண்ணீர்

செப்டெம்பர் 25 1959. சாலமன் டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க அவர்கள் சில இனவாத சக்திகள் நடத்திய சாதியின் விளைவாக படுகொலை செய்யப்பட்டார்.

கொலையாளி ஒரு பௌத்த தேரர். தல்துவ சோமராம தேரர். பின்னனியில் இருந்த பிரதான மாஸ்டர் மைண்ட் ஆக கருதப்பட்டவர் களனி ராஜமஹா விகாரையின் பீடாதிபதி மாபிடிகம புத்தரகித்த தேரர். சுதந்திர கட்சியின் ஒரு சில முக்கியபுள்ளிகளும் இந்த படுகொலையுடன் தொடர்புபட்டிருந்தது பின்னாட்களில் அறியப்பட்டது. பண்டாரநாயக்க அவர்களின் திடீர் இறப்பை தொடர்ந்து அமைச்சராக இருந்த விஜயானந்த தஹநாயக்க அவர்கள் அரசாங்கத்தின் புதிய இடைக்கால பிரதமராக நியமிக்கபட்டார்.

புதிதாக நியமிக்கபட்ட பிரதமரின் மீது அமைச்சரவைக்கு பெரிதாக நம்பிக்கையோ திருப்தியோ இருக்கவில்லை. தஹநாயக்க பொறுப்பேற்று சில மாதங்களிலேயே சுதந்திர கட்சியில் இருந்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேர் பதவி விலகினார்கள். சிலர் விலக்கடிக்கப்பட்டார்கள். மேலும் சுதந்திர கட்சியின் மூத்த அங்கத்தவரான சாள்ஸ் பேர்சிவெல் டி சில்வா பிரதமர் பதவி தனக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தையும் அரசியல் வட்டங்களிடம் ஆலோசித்து வந்தார்.

நிலைமை கைமீறுவதை உணர்ந்த தஹநாயக்க 1959 டிசம்பரில் பாராளுமன்றத்தை கலைத்து மார்ச் மாதத்தில் புதிய தேர்தலொன்றுக்கு தயாரானார். 151 பேர் கொண்ட பாராளுமன்ற தேர்தலுக்கான தயார்படுத்தல்கள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

பண்டாரநாயக்கவின் திடீர் மறைவும், தஹநாயக்கவின் திறமையற்ற நிர்வாகமும் சுதந்திர கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை வெகுவாக ஆட்டுவித்தது.

நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட டட்லி சேனநாயக்க அவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர பெரிதும் பிரயத்தனம் செய்தார். தஹநாயக்க அவர்கள் ஆட்சியை பிடிக்கும் நோக்குடன் தனிக்கட்சியை ஆரம்பித்து போட்டியிட்டார்.

சுதந்திர கட்சியின் நிலைகுறித்து கவலை கொண்ட சார்ள்ஸ் பேர்சிவெல் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார். கொழும்பு ரோஸ்மெட் பிளேஸில் உள்ள பண்டாரநாயக்க இல்லத்தை அடைந்து சிறிமாவின் ஆதரவை வேண்டினார்.

ஆரம்பத்தில் தீர்க்கமாக மறுப்பு தெரிவித்த போதிலும், ஒருகட்டத்தில் கணவருடைய கட்சிக்காக தான் ஆற்ற வேண்டிய கடமையை உணர்ந்த சிறிமா தேர்தல் அரங்குகளில் கட்சிக்காக பேச்சுக்களை நடாத்த ஒப்புக்கொண்டார். பெண்களின் கண்ணீருக்கு, அதிலும் குறிப்பாக கணவனை இழந்த பெண்களின் கண்ணீருக்கு நம்நாட்டில் அதிகப்படியான அனுதாபம் உண்டு. சிறிமா வின் பேச்சுக்காகவே சுதந்திர கட்சியின் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் வந்து குவியத்தொடங்கினர்.

அதிலும் குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் இருந்த பெண்களின் ஆதரவு இருந்தது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்த தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை. ஐ.தே.கட்சி 50 ஆசனங்களையும் சுதந்திர கட்சி 46 ஆசனங்களையும் பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்த போதிலும் 30 நாட்களில் நடைபெற்ற அரியணை மீதான முதல் பாராளுமன்ற உரையில் மூன்றாவது பெரும்பான்மை சக்தியாக இருந்த தமிழரசு கட்சி ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க மறுத்தமையால் புதிய தேர்தலொன்றுக்கான சூழ்நிலை மீண்டும் உருவானது.

ஜூலை மாதத்தில் நடைபெற இருந்த தேர்தலுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்றது. கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் சுதந்திர கட்சிக்கான பேச்சாளராக சிறிமா பணியாற்றினார். ஆனால் இதனை சிறிமாவின் உறவினர்கள் விரும்பவில்லை.’சிறிமாவின் செயலால் குடும்ப கௌரவம் நிச்சயம் குலையப்போகிறது’ அடுப்படியில் இருக்க வேண்டிய பெண்ணுக்கு அரசியலில் என்ன வேலை’ என உறவுகள் ஒருபுறம் முட்டுக்கட்டைகளை கொடுக்க மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சியானது ‘சிறிமா இலங்கையை துண்டாடி தமிழ் அரச சக்திகளுடன் பங்கிட்டுக்கொள்ள போகிறார்’ என்றவாறான கருத்துக்களை கேலிச்சித்திரங்கள் மூலம் மக்களிடையே பரப்பிக்கொண்டிருந்தது.

எது எவ்வாறு போன போதிலும் தன்னுடைய இலக்கில் குறி தவறாது இயங்கிக்கொண்டிருந்தார் சிறிமா. மேடைகளில் தன்னுடைய கணவன் பற்றிக்கூறும் போதெல்லாம் அவர் சிந்திய கண்ணீர் துளிகளுக்கு மக்கள் கூட்டத்தில் இருந்து ஆரவாரத்துடன் அனுதாபங்கள் வெளிப்பட்டன.

பண்டாரநாயக்கவின் கனவு இலங்கையை கட்டியெழுப்ப முடிந்தவரை போராடுவேன் என அவர் நிகழ்த்திய உரைக்கு பலன் இல்லாமல் போகவில்லை. இலங்கை சுதந்திரக்கட்சி மொத்தமாக 75 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. 30 ஆசனங்களுடன் எதிர்க்கட்சி பொறுப்பை ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக்கொண்டது.

முதல் பெண் அரசதலைவர்

உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பதவியை பெறும் போது

மேற்கத்திய நாடுகள் என்னதான் முற்போக்குவாத சிந்தனையுடன் செயற்பட்டாலும் நவீன மக்களாட்சி உலகின் முதலாவது பெண் பிரதமர் (அரசாங்கத்தின் தலைவர்) என்ற பதவியை ஏற்று உலக அரசியல் வரலாற்றில் நிலையான பெயர் பெற்றார் சிறிமா.

பிறந்த பொழுதில் உரைக்கப்பட்ட நாடாளும் யோகத்தை அடைந்தார். சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இல்லாது செனட்டராக உள்நுழைந்து பிரதமர் பதவியை பெற்ற சிறிமா 1960 தொடக்கம் 1965 வரை பிரதமராக பணியாற்றினார்.

1965 முதல் 1970 வரை எதிர்க்கட்சி நிலையில் இருந்து விட்டு மீண்டும் 1970 இல் ஆட்சிக்கு வந்தது சுதந்திரக்கட்சி. 1970 முதல் 1977 வரையான காலம் சிறிமாவின் ஆட்சியில் முக்கியமான ஒரு பகுதி. 1972 இல் இலங்கையின் வரலாறானது புதிய கோணத்தில் நகர ஆரம்பித்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த போதிலும் கூட இலங்கையின் அரசாட்சியின் மன்னராக பிரித்தானிய அரசரே பதவி வகித்தார்.

இதில் இருந்து இலங்கையை மீட்டு, பூரண இறையாண்மை மிக்க ஒரு நாடாக இலங்கையை மாற்றியது சிறிமாவின் ஆட்சியே.(அதாவது இலங்கையின் ஆட்சியில் எந்த ஒரு வெளிநாட்டினதும் தாக்கம் இல்லாது முழுமையாக மக்கள் ஆட்சியாக மாற்றி இலங்கை குடியரசு ஆக்கப்பட்டது என்பதால் குறிப்பிடப்பட்டது).

அதுவரை சிலோன் என்று அறியப்பட்ட நம்நாடு 1972 முதல் ஸ்ரீலங்கா ஜனநாயக சோஷலிச குடியரசு என்ற புதிய பெயரை பெற்றது. 1970 முதல் 1977 காலப்பகுதியில் சிறிமாவின் பொருளாதாரக்கொள்கையால் இலங்கையின் அனைத்து தரப்பினரும் பெரும் சிக்கலுக்கு முகம் கொடுத்தனர். மூடிய பொருளாதாரம் மக்களின் கழுத்தை நெரித்தது. மேலும் அவசரகால முறையையும் அமுல்படுத்தியது மேலும் நிலைமையை சிக்கலாக்கியது.

1977இல் நடைபெற்ற தேர்தல் சிரிமாவுக்கு பலத்த அடியாக விழுந்தது. புதிய ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் சிறிமாவின் குடியுரிமை உட்பட பல சலுகைகள் பறிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு தசாப்தத்துக்கு முடக்கி வைக்கப்பட்டார்.

1986 இல் மீண்டும் குடியுரிமை மற்றும் தேர்தலில் போட்டியிடும் உரிமைகள் கிடைத்தவுடன் 1989 தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற திருமதி பண்டாரநாயக்க, 1994 இல் தன்னுடைய மகள் சந்திரிகா குமாரதுங்கவின் ஜனாதிபதி ஆட்சியில் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

இக்காலகட்டத்தில் சுதந்திர கட்சியின் உண்மையான தலைமை யார் என்பதான கடும் பனிப்போர் தாய்-மகள் உறவுக்குள் இருந்ததாக பேசப்பட்டது. தன்னுடைய பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த சிறிமா 2000ஆம் ஆண்டு அக்டொபர் 10 இல் பொதுத்தேர்தல் ஒன்றில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பும் வேளையில் மாரடைப்பால் உயிர் துறந்தார்

Exit mobile version