சட்டம் எவ்வாறு கொண்டுவரப்பட்டது?
பிப்ரவரி மாதம் 3ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பை இலங்கை அரசு ஜனவரி மாதம் ஒரு அதிகார பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிவித்தது.
நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணதிலக வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, பொது மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் விஷயங்கள் குறித்த முக்கியமான தகவலை அவர்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி இலங்கை குடிமக்களுக்கு அரசின் தகவல்களை பெறுவதற்கான உரிமை அளிக்கப்பட்டுள்ளது. தரவுகள் என்பது ”அரசின் கையில், கட்டுப்பாட்டில் அல்லது கண்காணிப்பில் உள்ள தகவல்கள்” என்று பொருள்படுகிறது.
விண்ணப்பதாரர்கள், தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ், அமைச்சுக்கள், துறைகள், பொது நிறுவனங்கள், உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் அரசிடம் இருந்து கணிசமாக நிதி பெறும் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு அமைப்புக்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஆகிய நிறுவனங்கள் தகவல்களை வழங்க வேண்டும்.
ஆனால், தேசத்தின் பாதுகாப்பு, பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்ங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை, தனி நபர்களின் தகவல்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் தொடர்பான சில தகவல்களை பெற தடை உள்ளது.
எடுத்துக்காட்டாக, ராணுவத்தின் ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான விவரங்களை கேட்கமுடியாது. உதாரணமாக, ராணுவத்தில் எத்தனை பல்குழல் ராக்கெட்கள் உள்ளன என்று கேட்க முடியாது. இவை வெளிப்படுத்தக்கூடாத தகவல்கள் ஆகும். ஒரு மருத்துவரை ஒரு குறிப்பிட்ட நோயாளிக்கு எந்த விதமான சிகிச்சை தரப்பட்டது என்று கேட்கக்கூடாது. இது ஒரு நோயாளின் அந்தரங்கத்தில் தலையீடு செய்வதாகும் ஆகும். இதே போல, வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் வியாபார ஒப்பந்தத்திற்கு முன்பே அது தொடர்பான தகவல்களை கேட்கமுடியாது,” என்றார் அமைச்சர் கருணாதிலக.
இந்த சட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது?
ஜனவரி 2015ல் ஆட்சிக்கு வந்த அதிபர் மைத்திரிபால சிறிசேன அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று தான் தகவல் அறியும் உரிமை சட்டம்.
2016 ஜூன் மாதம் 24ம் தேதி என்று நாடாளுமன்றம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை அடிப்படை உரிமைகளை ஒன்றாகஅங்கீகரித்து ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவந்தது.
ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நாடாளுமன்ற சபாநாயகர் ஒப்புதல் அளித்து சட்டமாக உருவாக்கினார்.
சட்டத்தை பற்றிய எதிர்வினைகள்
தகவல் அறியும் உரிமை சட்டம் நாடு எப்படி ஆளப்படுகிறது என்பதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். ”ஒரு கண்ணாடி பெட்டியில் அரசை வைப்பதற்கு சமம்” என்றார்
இலங்கையில் ஊடக கலாச்சாரத்தில் இந்த சட்டம் ஒரு முக்கியமான கட்டம் என்றார். ”பத்திரிகையாளர்கள் வதந்தியை விட, சரிபார்க்கப்பட்ட, அரசாங்கத்தில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட தகவல்களை சார்ந்திருக்கலாம்,”என்றார்.
மக்களுக்கு இந்த சட்டத்தை பற்றி பெரிய அளவில் தெரியாது. ஆனால், அரசியல்வாதிகள் இனி, செயல்படுவதற்கு முன்பு இரண்டு முறை அல்ல, மூன்று முறை யோசித்து செயல்பட வேண்டும். ஏனெனில்,தகவல்களை சட்ட ரீதியாக கேட்டு பெற பொது மக்களுக்கு உரிமை உள்ளது என்றார் அவர்.
அரசாங்க தகவல் துறையின் தலைவர் டாக்டர். ரங்கா பிரசன்ன காலன்சூர்யா, ”தகவல் அறியும் உரிமை சட்டம் இலங்கையில் ஜனநாயகம் திரும்புவதற்கான தொடக்கம்” என்றார்.
இந்த சட்டம் வெறும் ஊடகங்களுக்கும், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கானது மட்டும் அல்ல. இது நாடு முழுமைக்கான சட்டமும் கூட. வெறும் தொழில் வல்லுனர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து பொதுமக்களுக்குமான சட்டம். ஒரு விவசாயி அல்லது ஒரு மீனவர் தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கான சட்டம்,”என்றார்.
‘இந்த சட்டத்தை விட வேறு என்ன விதமான வெளிப்படைதன்மையை நீங்கள் கொண்டுவர முடியும்? அமைச்சர்கள் மட்டுமல்ல அரசாங்கத்திற்கு சவால் விட கூடிய சட்டம்,” என்றார்.
அடுத்து என்ன ?
இந்த சட்டம் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் ஒரு வெளிப்படைதன்மையை கொண்டுவரும். ஆனால் மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என எல்லோருடைய ஈடுபாடும்இருந்தால் தான் இந்த சட்டத்தை வெற்றி பெற செய்ய முடியும் என்று ஊடகங்கள் கருதுகின்றன.
‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் எதிர்காலம் என்பது மக்கள் தங்களுக்கு தகவல் அறியும் உரிமையை எந்த அளவுக்கு விவேகத்துடனும் வலுவாகவும் பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்தே தெரியவரும்,” என்று பரவலாக வாசிக்கப்படும் தி சண்டே டைம்ஸ் என்ற ஆங்கில தினசரி குறிப்பிட்டுள்ளது.
’சிலோன் டுடே’ பத்திரிகை, இந்த சட்டம் ”அரசாங்கம் மிக வெளிப்படையாக செயல்பட கட்டாயப்படுத்தும். மற்றும் மக்கள் மிகவும் விழிப்புடன் மற்றும் விவரங்களை தெரிந்தவர்களாக இருக்க பயன்படும் என்று கூறுகிறது. இந்த விவகாரத்தை பொருத்தவரை ஒரு முக்கியமான நிபந்தனை என்னவென்றால், விவரங்களை அறிய இருக்கும் தேவை பற்றி மக்கள் உணரவேண்டும் என்பது தான்,” என்று அது குறிப்பிட்டுள்ளது.
நன்றி BBC NEWS